Published : 13 Feb 2023 03:26 PM
Last Updated : 13 Feb 2023 03:26 PM
பெங்களூரு: “சாவர்க்கரையும், கோட்சேவையும் வழிபடும் பாஜக, ராணி சென்னம்மாவை புறக்கணிக்கிறது” என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமய்யா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் அங்கு தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி இப்போதிருந்தே அரசியல் கட்சிகள் அடிப்படை அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
காங்கிரஸ் கட்சி 'மக்களின் குரல்' என்ற பெயரில் கடந்த மாதமே பிரச்சாரத்தை தொடங்கி அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவின் விஜயபுராவில் பிரச்சாரம் செய்த சித்தராமய்யா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "பாஜக கோட்சேவையும், சாவர்க்கரையும் வழிபடுகிறது. போற்றுகிறது. அவர்களில் ஒருவர் மகாத்மா காந்தியை கொலை செய்தவர். இன்னொருவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் வாங்கியவர். அவர்களை முன்னிறுத்துவதன் மூலம் வருங்காலத்திற்கு இவர்கள் என்ன கற்பிப்பார்கள்? ஆனால், அதே பாஜகவினர் ஒருபோதும் கிட்டூர் ராணி சென்னம்மாவை போற்றியதில்லை. கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுத்தவர் ராணி சென்னம்மா" என்றார்.
கடந்த வாரம் காலபுராகி பகுதியில் பிரச்சாரம் செய்தார் சித்தராமய்யா. அப்போது அவர், "நான் இந்துத்துவா அரசியலை எதிர்க்கிறேன். இந்துத்துவா கொள்கையும், இந்து தர்மமும் வெவ்வேறு. என்னை இந்து விரோதியாக, இந்து தர்ம எதிர்ப்பாளராக சித்தரிக்கின்றனர். ஆனால், நான் இந்து விரோதி அல்ல. நான் இந்து தான். ஆனால் மனுவாதத்தையும், இந்துத்துவத்தையும் எதிர்க்கும் இந்து" என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சு பரவலாக விவாதப் பொருளான நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்தார். "சித்தராமய்யா வாக்கு வங்கி அரசியல் செய்கிறார். அவர் அதில் கை தேர்ந்தவர். அவரது இந்து விரோத முகம் ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. இந்தத் தேர்தலிலும் அது அம்பலப்படுத்தப்படும்" என்று முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT