Published : 13 Feb 2023 07:28 AM
Last Updated : 13 Feb 2023 07:28 AM
புதுடெல்லி: ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று நியமனம் செய்தார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை பாஜக மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் சிவ பிரதாப் சுக்லா, இமாச்சல பிரதேச ஆளுநராகவும், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர ஆளுநராக இருந்த விஸ்வபூஷன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்க்கே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ராதாகிருஷ்ணா மாத்தூரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அருணாசல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் டாக்டர் பி.டி.மிஸ்ரா, லடாக் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யத்ரிவிக்ரம் பர்நாயக், அருணாசலபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் ஆளுநராக இருந்த பாகு சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி: ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.அப்துல் நசீர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். நீதிபதி பணியில் இருந்து கடந்த ஜன.4-ம் தேதி ஓய்வு பெற்றார். பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அயோத்தி - பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு, தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார்.
சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி இவர். ஆனால், மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீர்ப்பை வழங்கினார். நீதித் துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிக குறைவாக இருப்பதாக தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இவர் குறிப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT