Published : 13 Feb 2023 07:10 AM
Last Updated : 13 Feb 2023 07:10 AM

பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரைவில் இந்தியா-இலங்கை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

இணை அமைச்சர் எல்.முருகன்

சென்னை: இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை சென்றனர். அப்போது, இலங்கையில் 13-வதுசட்டத் திருத்தை விரைவில் அமல்படுத்துவது, இலங்கை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 111 படகுகளை விடுவிப்பது, இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசின் நிதிஉதவியால் யாழ்ப்பாணத்தில்கட்டப்பட்டுள்ள கலாச்சார மையத் திறப்பு விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், எல்.முருகன்,அண்ணாமலை ஆகியோர் நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:

கடந்த 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்றபோது, கலாச்சார மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது.

11 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தில், 600-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் அரங்கம், கருத்தரங்கக் கூடம், வர்த்தக மையம்,தமிழ் கலைகளைப் போற்றும் சிறப்புப் பகுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர் யாரும்இல்லை. பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் அனைத்துப் படகுகளும் விடுவிக்கப்படும்.

மேலும், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், இந்தியா, இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x