Published : 11 Feb 2023 01:27 PM
Last Updated : 11 Feb 2023 01:27 PM

இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும்: ஐ.நா நிபுணர் குழு

பிரதிநிதித்துவப்படம்

வாஷிங்டன்: இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா: ஐநா மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிய 1950 முதல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. இந்த பெயரை அது இன்னும் 2 மாதங்களில் இழக்கும் என்றும், வரும் ஏப்ரலில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. ஐநாவின் அறிக்கை மற்றும் பிற அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் உதவியோடு Pew Research Center எனும் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

''இந்தியாவில் 2011க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, அதன் உண்மையான மக்கள் தொகை தெரியவில்லை. எனினும், தோராயமாக இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவைவிட(74.4 கோடி ) அதிகம்; ஒட்டுமொத்த அமெரிக்காவைவிட(104 கோடி) அதிகம்.

சீனாவிலும் 140 கோடிக்கும் அதிகமாக மக்கள் இருக்கிறார்கள். என்றாலும், சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், வரும் ஏப்ரலில் சீன மக்கள் தொகையைவிட இந்திய மக்கள் தொகை அதிகமாகும். வரும் 2030க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக உயரும். வரும் 2047 வரை இந்தியாவில் மக்கள் தொகை மெதுவாக உயர்ந்து கொண்டே இருக்கும்.

வரும் 2068ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை 200 கோடியைத் தாண்டும். எனினும், 2047க்குப் பிறகு மக்கள் தொகை விகிதம் குறைந்து 2100ம் ஆண்டில் அது மீண்டும் 100 கோடியாக குறையும்.

இந்தியாவில் இளைஞர் சக்தி: இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உலகில் 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களில் 5ல் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இந்திய மக்களின் சராசரி வயது 28 ஆக உள்ளது. அமெரிக்காவில் இது 38 ஆகவும், சீனாவில் இது 39 ஆகவும் உள்ளது. இந்திய மக்கள் தொகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள். சீனாவில் 14 சதவீதமும், அமெரிக்காவில் 18 சதவீதமும் இருக்கிறார்கள்.

சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்திய பெண்கள் சராசரியாக 2 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். சீனாவில் இது 1.2 ஆகவும், அமெரிக்காவில் இது 1.6 ஆகவும் உள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது.

1950ல் இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதம் 5.9 ஆகவும், 1992ல் 3.4 ஆகவும் இருந்தது. இதேபோல், இந்தியாவில் அனைத்து மத பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், மற்ற மத பெண்களைக் காட்டிலும் இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சற்று அதிகரித்து காணப்படுகிறது. 1992ல் அவர்கள் சராசரியாக 4.4 குழந்தைகளை பெற்ற நிலையில் அது தற்போது 2.4 ஆக குறைந்துள்ளது.

நகரங்களில் வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மத ரீதியாக பார்க்கும்போது சமண மதத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் குழந்தையை 24.9 வயதிலும் முஸ்லிம் பெண்கள் 20.8 வயதிலும் பெற்றுக்கொள்கிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x