Published : 11 Feb 2023 05:47 AM
Last Updated : 11 Feb 2023 05:47 AM

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து பிப்.13-ம் தேதிக்குள் செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் காண்காணிப்பின் கீழ் விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல்.ஷர்மா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை பிப்.10-ம்தேதி ஒன்றாக இணைத்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

ஹிண்டன்பர்க் ஆய்வறிக் கையை விசாரிக்க கோரிய மனுக்கள் மீது நிதியமைச்சகம் மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தங்களது பதிலை வரும் திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும். இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை ஆராய நீதிபதி அடங்கிய நிபுணர்கள் குழு அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க நாங்கள் தலையிட்டுஒ ரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கொள்கை விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது அரசாங்கத்தின் வேலை.

முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு ஆர்வத்துடன் செயல்படுமானால் தற்போதைய ஒட்டுமொத்த நிலவரத்தை ஆராய நீதிபதி, துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.

செபி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘அதானி விவகாரத்தில் செபி மற்றும் பிற சட்டப்பூர்வ அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன’’ என்று தெரிவித்தார். வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக் கப்பட்டது.

அமெரிக்க சட்ட நிறுவனத்தை தேர்வு செய்த அதானி: ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள கவுதம் அதானி தயாராகியுள்ளார். இதற்காக, அவர், அமெரிக்காவைச் சேர்ந்த அதிகம் செலவுமிகுந்த வாச்டெல் சட்ட நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார். வாச்டெல் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பல பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றுள்ள மிக பிரபல நிறுவனமாகும் என பைனான்சியல் டைம்ஸ் (எப்டி) தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x