Published : 11 Feb 2023 04:47 AM
Last Updated : 11 Feb 2023 04:47 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 24-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் பிப்ரவரி 10-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் அசோக் கெலாட் நேற்று தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் தவறுதலாக இந்த ஆண்டு பட்ஜெட் உரைக்கு பதிலாக கடந்த பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்தார். 8 – 10 நிமிடங்கள் வரை, தாம் பழைய பட்ஜெட்டை வாசிக்கிறோம் என்பதை முதல்வர் அசோக் கெலாட் உணரவில்லை. இந்நிலையில் அவையில் அதிகாரிகள், கேலரியில் இருந்த நிதித் துறை அதிகாரிகள் இந்தக் குளறுபடி குறித்து தலைமை கொறடா மகேஷ் ஜோஷியிடம் கூற, அவர் இதுபற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினார். உடனே உரை வாசிப்பதை அசோக் கெலாட் நிறுத்தினார்.
இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை 30 நிமிடங்களுக்கு சபாநாயகர் சி.பி.ஜோஷி ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் கூடியதும், பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குலாம் சந்த் கட்டாரியா குற்றம் சாட்டினார். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை மதியம் 12.12 வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஒரு வீடியோ பதிவில், “8 நிமிடங்கள் வரை பழைய பட்ஜெட்டை படிக்கிறோம் என்பதை உணராத ஒரு முதல்வரின் கையில் ராஜஸ்தான் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் அசோக் கெலாட் பின்னர் கூறும்போது சரியான பட்ஜெட்டையே தான் படித்ததாகவும், ஆனால் அதில் ஒரு பக்கம் மட்டும் தவறாக இருந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT