Published : 10 Feb 2023 07:32 PM
Last Updated : 10 Feb 2023 07:32 PM
மும்பை: “நான், உங்கள் குடும்ப உறுப்பினர்” என்று போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் போரா முஸ்லிம் சமுதாய தலைவர்கள் வரவேற்றனர். நூற்றுக்கணக்கான போரா முஸ்லிம் சமூக மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கல்வி நிறுவனத்தை தொடக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “உங்களிடம் வரும்போது குடும்பத்திற்கு வருவதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இன்று சில வீடியோக்களைப் பார்த்தேன். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு புகார் கூற தோன்றுகிறது. அந்த வீடியோவில் என்னை குஜராத்தின் முதல்வர் என்றும், பிரதமர் என்றும் பலமுறை குறிப்பிட்டார்கள். நான், உங்கள் குடும்ப உறுப்பினர்.
நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இங்கு வரவில்லை. இந்தக் குடும்பத்தோடு எனக்கு 4 தலைமுறை தொடர்பு இருக்கிறது. 4 தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
இன்று தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனம் வளர்ச்சிக்கான, மாற்றத்திற்கான அடையாளம். காலத்திற்கு ஏற்ப தாவூதி போரா சமூகம் முன்னேற்றமடைந்து வருகிறது. நமது விருப்பத்தின் பின்னணியில் நல்ல நோக்கம் இருக்குமானால், அதன் முடிவும் நல்லதாகவே இருக்கும். இந்தக் கல்வி நிறுவனம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT