Published : 10 Feb 2023 02:12 PM
Last Updated : 10 Feb 2023 02:12 PM

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை தவறுதலாக வாசித்த ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் அசோக் கெலாட், தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் நிதித்துறை முதல்வர் அசோக் கெலாட் வசம் உள்ளது. அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இம்மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. முன்னதாக, பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் வாசித்தார். அப்போது, கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் தவறுதலாக வாசித்துக் கொண்டிருப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி குறிக்கிட்டு சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, அவையில் இருந்த பாஜக எம்எம்ஏக்கள் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தனது தவறை உணர்ந்த முதல்வர் கெலாட், கால அவகாசம் கேட்டதை அடுத்து சபாநாயகர் சி.பி. ஜோஷி அவையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா, ''முதல்வர் அஷோக் கெலாட் 8 நிமிடங்களுக்கு கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். நான் முதல்வராக இருந்தபோது, பட்ஜெட் உரையை தொடர்ந்து பலமுறை சரிபார்த்துவிட்டுத்தான் வாசிப்பேன். ஆனால், எவ்வித சரிபார்ப்புப் பணிகளையும் மேற்கொள்ளாமல் முதல்வர் கெலாட் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்த ஒரு முதல்வரின் கைகளில் ஒரு மாநிலம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்'' என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர், ''பட்ஜெட் ஏற்கெனவே கசிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டை அவையில் சமர்ப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டப்பேரவையை முதல்வர் அசோக் கெலாட் அவமதித்துவிட்டார்'' என குற்றம் சாட்டினார்.

அரை மணி நேரம் கழித்து அவை மீண்டும் கூடியதும், முதல்வர் அசோக் கெலாட், தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் கெலாட் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் கெலாட், ''பட்ஜெட் உரையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நான் வாசிக்கும் உரைக்கும் உங்களிடம் உள்ள பட்ஜெட் நகலுக்கும் வித்தியாசம் இருந்தால் நீங்கள் அதை சுட்டிக்காட்ட முடியும். முன்பு என்னிடம் வழங்கப்பட்ட பட்ஜெட் உரையில் ஒரு பக்கம் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது பட்ஜெட் கசிந்துவிட்டதாக எவ்வாறு கூற முடியும்?'' என கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x