Published : 10 Feb 2023 12:24 PM
Last Updated : 10 Feb 2023 12:24 PM
புதுடெல்லி: "நாடாளுமன்றத்தில் நான் தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை; நான் பயன்படுத்திய வார்த்தையின் அர்த்தம் பாவி என்பதாகும்'' என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: 'காலி' என்றால் என்ன? ஹராம் என்ற வார்த்தயின் அர்த்தம் பாவம் அல்லது தடைசெய்யப்பட்டது. அந்த வார்த்தயின் மூலமொழியான அரபியில் அதன் நேரடி அர்த்தம் பாவி. அப்படிதான் நான் புரிந்து வைத்துள்ளேன். மற்றவர்கள் வேறு ஏதாவது அர்த்தம் எடுத்துக் கொண்டால் அது என்னுடைய தவறு இல்லை.
முதலில் அந்த குறிப்பிட்ட நபர் நான் பேசும் போது தொடர்ந்து இடைமறித்துக் கொண்டே இருந்தார். இது குறித்து நான் அவைத் தலைவரிடம் 5 முறைக்கு மேல் முறையிட்டேன். ஒன்று அவர் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் அல்லது வெளியே அனுப்புங்கள் என்றேன். அவைத் தலைவர் எதுவும் செய்யாமல் தன்னுடைய கடமையை தவறினார். அடுத்ததாக நான் பேசி அமர்ந்த பின்னர், ராம் நாயுடு பேசத் தொடங்கிய பின்னரும் அந்த நபர் இடைமறித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரை நான் அந்த பெயரில் அழைத்தேன். ஏனென்றால் அவரது செயல் தவறானது.
நான் இந்தி பேசுபவள் இல்லை. நான் பேசிய வார்த்தைக்கு இந்தியில் அவர்கள் தாய் தந்தை குறித்து வேறு அர்தத்ம் எடுத்துக்கொண்டால் அது என்னுடைய தவறு இல்லை. உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் பல பாஜக எம்.பி.கள் என்னைப் பாரட்டினர். நான் பேசியதை சரி தவறு என்று நான் சொல்ல வரவில்லை. நாடாளுமன்றத்தில் நீங்கள் எனக்கு பாதுகாப்பளித்து இருக்க வேண்டும் மாறாக நீங்கள் என்னை வசைபாடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்கள் என்னை கதாநாயகியாக ஆக்க நினைத்தால் அதற்காக நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மஹுவா மொய்த்ரா உரையாற்றினார். தனது உரையை முடித்த பின்னர், தன்னை பேச விடாமல் இடைமறித்த எம்.பி., ரமேஷ் பூரியை பார்த்து காலி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த அபாண்டமான வார்த்தைக்காக மஹுவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மஹூவா, நான் ஆப்பிளை ஆப்பிள் என்றுதான் அழைப்பேன், ஆரஞ்சு என்று அழைக்க முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT