Published : 10 Feb 2023 08:11 AM
Last Updated : 10 Feb 2023 08:11 AM

மாநிலங்களவைக்கு தலைமை தாங்கிய பி.டி.உஷா - புதிய மைல்கற்களை உருவாக்குவதற்கு உறுதி

புதுடெல்லி: பிரபல விளையாட்டு வீராங்கனையும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷா நேற்று மாநிலங்களவையை சிறிது நேரம் வழிநடத்தினார். அப்போது புதிய மைல்கற்களை உருவாக்குவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதனிடையே, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் இல்லாத நேரத்தில், பி.டி. உஷா சிறிது நேரம் மாநிலங்களவைக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார்

இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “அதிகாரம் என்பது பெரிய பொறுப்பை உள்ளடக்கியது என்பது பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் கூற்று. அதைநான் இன்று மாநிலங்களவைக்கு தலைமை தாங்கியபோது உணர்ந்தேன். நாட்டு மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள நான், புதிய மைல்கற்களை உருவாக்குவேன் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் இல்லாதபட்சத்தில், அவையை நடத்தும் துணைத்தலைவர்கள் குழு பட்டியலில் முதல் நியமன உறுப்பினராக பி.டி.உஷா கடந்த டிசம்பரில் இடம்பிடித்தார்.

தடகள வீராங்கனையான பி.டி. உஷா, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

அவரை கவுரவிக்கும் வகையில்,பாஜக அரசு கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக (நியமன) நியமித்தது. அத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பி.டி. உஷா கடந்தஆண்டு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x