Published : 09 Feb 2023 04:07 PM
Last Updated : 09 Feb 2023 04:07 PM
புதுடெல்லி: உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த தமிழகத்தில் 10 உள்ளிட்ட 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் மக்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
மத்திய ஆணையத்தால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நீர்வழிப் பாதைகள் எத்தனை என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் வியாழக்கிழமை ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016-ன் படி இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் தேசிய நீர்வழிப் பாதை 4-ல், வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெத்தகஞ்சம் முதல் சென்னை மத்திய ரயில் நிலையம் வரை -316 கிலோ மீட்டர்), தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை மத்திய ரயில் நிலையம் முதல் மரக்காணம் வரை -110 கிலோ மீட்டர்), மரக்காணம் முதல் புதுச்சேரி வரை (கழுவேலிக் குளம் வழியாக -22 கிலோ மீட்டர்) இடம் பெற்றுள்ளது.
தேசிய நீர்வழிப் பாதை 20-ல் பவானி ஆறு (95 கிலோ மீட்டர்), 55-ல் காவேரி-கொள்ளிடம் ஆறு (311 கிலோ மீட்டர்), 69-ல் மணிமுத்தாறு (5 கிலோ மீட்டர்), 75-ல் பாலாறு (142 கிலோ மீட்டர்), 77-ல் பழையாறு (20 கிலோ மீட்டர்), 80-ல் பொன்னியாறு (126 கிலோ மீட்டர்), 99-ல் தாமிரபரணி ஆறு (62 கிலோ மீட்டர்) ஆகியவை நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT