Published : 09 Feb 2023 12:40 PM
Last Updated : 09 Feb 2023 12:40 PM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்ரா ராமகிருஷ்ணன் | கோப்புப்படம்

புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் செயல் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு பண மோசடியுடன் இணைந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனுவினை விசாரித்த நீதிபதி ஜாஸ்மீட் சிங், "மனுதாரரின் விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்படுகிறது" என்றார்.

முன்னதாக, தேசிய பங்குச்சந்தையின் கே-லோக்கேஷன் ஊழல் வழக்கில் சிபிஐ-ஆல் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த என்எஸ்இ யின் முன்னாள் செயல் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை, தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ வழக்கில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், சித்ரா ராமகிருஷ்ணன் முக்கியமான மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

தன்னுடைய ஜாமீன் மனுவில், தனக்கு எதிராக எந்த தீவிர குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது தன்மீது பதியப்பட்டுள்ள வழக்கும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை என்று சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

வழக்கு பின்னணி: பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்வழக்குத் தொடர்பாக 18 பேர் மீது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அபராதம் விதித்தது. என்எஸ்இக்கு ரூ.7 கோடி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி, என்எஸ்இ முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் 2013 முதல் 2016 வரை சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்துவந்துள்ளார். அந்த யோகியின் அறிவுறுத்தலின் படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணன் பணிக்கு அமர்த்தினார் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன். மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீதும் சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் மூவரும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 - 2017 வரையில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x