Published : 16 May 2017 12:07 PM
Last Updated : 16 May 2017 12:07 PM
அல் குவைதா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பெயரில் ஆதார் அட்டை பெற முயன்றதாக ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் ஆதார் பதிவு மையத்தை நடத்தி வருகிறார் சதாம் மன்சூரி (35).
அல் குவைதா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பெயரில் ஆதார் அட்டை பெற இவர் முயற்சித்திருக்கிறார்.
இதனைக் கண்டறிந்த ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யுஐடிஏஐ) போலீஸில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சதாம் மன்சூரியை போலீஸார் கைது செய்தனர். ஒசாமா பெயரில் ஆதார் அட்டை பெறுவதற்காக ஒசாமாவின் தெளிவற்ற புகைப்படம் ஒன்றையும் மன்சூரி ஆதார் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
மேலும், அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முகவரியில் அபோதாபாத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒசாமா கொல்லப்படும்போது ஹசாரா பிராந்தியம், கைபர் பக்துவான் மாகாணம் வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் இருந்த பங்களா ஒன்றில்தான் பதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒசாமா பெயரில் ஆதார் பெற முயன்ற மன்சூரி மீது சட்டப் பிரிவுகள் 66-டி, ஐடி சட்டப் பிரிவு 467, இபிகோ 468 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தீவிர விசாரணை:
மன்சூரியிடம் விசாரணை நடத்தியபோது, தான் அவ்வாறு ஏதும் செய்யவில்லை என்றும் யாராவது விஷமிகள் அப்படிச் செய்திருக்கலாம் என்றும் கூறினார். ஆனால், சதாம் மன்சூரியின் ஐடி-யைப் பயன்படுத்தியே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால் போலீஸார் தொடர்ந்து மன்சூரியிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT