Published : 09 Feb 2023 05:36 AM
Last Updated : 09 Feb 2023 05:36 AM
புதுடெல்லி: மத சிறுபான்மையினரை உள்ளடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று கொள்கை பகுப்பாய்வு மையம் (சிபிஏ) தெரிவித்துள்ளது.
உலக அளவிலான சிறுபான்மையினர் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளில் சிபிஏ நடத்திய ஆய்வின் முடிவில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கொள்கை பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது. அந்த வகையில் இந்த வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. கலாச்சாரம் மற்றும் கல்வியில் மத சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக குறிப்பிட்ட மற்றும் பிரத்யேகமான விதிகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுள்ளது. வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பிலும் மொழி வழி மற்றும் மத சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான வெளிப்படையான விதிகளோ, திட்டங்களோ எதுவும் இல்லை. அதற்கடுத்த இடங்களில் தென் கொரியா, ஜப்பான், பனாமா ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடங்களில் அமெரிக்கா, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வரிசையில் இங்கிலாந்து 54-வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 61-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையானது பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை வலியுறுத்தும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.
சிபிஏ அறிக்கை: எனவேதான், இந்தியாவுக்கு இந்த வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் மறு ஆய்வு செய்யவும்சிபிஏ அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்தியாவை மோதல்கள் இல்லாமல் வைத்திருக்க வேண்டுமானால், சிறுபான்மையினரைப் பற்றிய அணுகுமுறையை நியாயப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...