Last Updated : 16 May, 2017 12:45 PM

 

Published : 16 May 2017 12:45 PM
Last Updated : 16 May 2017 12:45 PM

ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பு: குஜராத் அரசுத் துறைகளின் இணையதளங்கள் முடக்கம்

குஜராத் அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்களும் ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பால் முடக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு ஆர்.டி.ஓ அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இணைய சேவை முடங்கியுள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் அரசாங்கம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் கணினிகளில் நிறுவப்படும் வரையிலும் யாரும் தங்களது கணினிகளை பயன்படுத்த வேண்டாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநிலத்தின் ஐடி துறை செயலர் தனஞ்செய் துவிவேதி கூறும்போது, "மாநிலம் முழுவதும் 120 கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் காவல் நிலையம், அகமதாபாத் மருத்துவமனை கணினிகளில் ரேன்ஸம்வேர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையில், மாநில ஐடி துறை மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகம் அனைத்து அரசு அங்கங்களுக்கும் இது குறித்த எச்சரிக்கைக் குறிப்பை அனுப்பியுள்ளன.

நாட்டிலேயே தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. சுமார் 45 ஆயிரம் கணினிகள் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் தலைநகருடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களுக்கும் பாதிப்பில்லை:

குஜராத் அரசு இயந்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த ஒரு தனியார் நிறுவனமும் சைபர் தாக்குதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், தனியார் நிறுவனங்கள் இதுதொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்காமல் தாமாகவே சிஸ்டம் அப்கிரேட் முறைகள் மூலம் நிலைமையை சமாளித்துக் கொண்டிருப்பதாக கணினித் துறை நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

'ரேன்ஸ்ம்வேர்' சில தகவல்கள்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘வன்னாகிரை’ என்ற வைரஸ் பிரிட்டன், ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கணினிகளில் பரவி அதன் செயல்பாட்டை முடக்கியது. இதை நீக்குவதற்கு 300 டாலரை இணையதள கரன்சியான பிட்காயினாக செலுத்த வேண்டும் என்ற தகவல் (Ransom amount) கணினி திரையில் தோன்றியது. இதனால் இது ‘ரேன்சம்வேர்’ (Ransomware) என்று அழைக்கப்படுகிறது.

இந்த 'வன்னாகிரை’ வைரஸ், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவிலும் சில இடங்களில் இந்த இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஆந்திர காவல் துறைக்கு சொந்தமான 25 சதவீத கணினிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டன.

மகாராஷ்டிர காவல் துறைக்கு சொந்தமான சில கணினிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்துக்குட்பட்ட தரியோடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள 4 கணினிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படிப் பரவுகிறது ரேன்சம்வேர்?

இது ஒரு கணினியிலிருந்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள (நெட்வொர்க்) மற்ற கணினிகளுக்கு பரவி வருகிறது. இதுதவிர, மின்னஞ்சல் மூலமும் பரவுகிறது. இவ்வாறு பரவுவதைத் தடுக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸிலிருந்து விடுபடுவதற்கு ரொக்கம் செலுத்துமாறு கோரினால் அதை ஏற்க வேண்டாம்.

எனவே மின்னஞ்சலில் வரும் தேவையற்ற இணைப்பு கோப்புகளைத் திறக்கக் கூடாது. குறிப்பாக, .lay6, .sqlite3, .sqlitedb, .accdb, .java and .docx என்று முடியும் கோப்புகளைத் திறக்க வேண்டாம் என இணையதள பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரகால மீட்புக் குழு (சிஇஆர்டி-இன்) தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x