Published : 07 Feb 2023 04:08 PM
Last Updated : 07 Feb 2023 04:08 PM
புதுடெல்லி: “2014-ல் ரூ.66,000 கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2022-ல் ரூ.11.58 லட்சம் கோடியானது எப்படி?” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி ஆற்றிய உரை: ''நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்டேன். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பல தரப்பினரிடமும் பேசினேன். இதன்மூலம் பல்வேறு விஷயங்களை அறிய முடிந்தது. இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை வேலைவாய்ப்பின்மைதான். உரிய வேலை கிடைக்காததால் அவர்களில் பலர் வாகன ஓட்டுநர்களாக இருக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் யோசனை அல்ல என்றும், அது ஆர்எஸ்எஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் யோசனை என்றும் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அப்போது அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதற்கு பதில் இல்லை. இந்தத் திட்டம் வன்முறைக்கே வித்திடும்.
குடியரசுத் தலைவரின் உரையில் வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது அதானி என்ற பெயர். அதானியால் எவ்வாறு எல்லா தொழில்களிலும் ஈடுபடவும் வெற்றிபெறவும் முடிகிறது என மக்கள் கேட்கிறார்கள். கடந்த 2014-ல் ரூ.66,000 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு 2022-ல் ரூ.11.58 லட்சம் கோடியானது எப்படி என்றும் மக்கள் கேட்கிறார்கள்.
காஷ்மீரின் ஆப்பிள் முதல் துறைமுகம், விமான நிலையம், சாலை மேம்பாடு என எல்லாவகையான தொழிலும் அவரது பெயர்தான் பேசப்படுகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோதுதான் நரேந்திர மோடிக்கு அதானியுடன் தொடர்பு ஏற்படுகிறது. மோடிக்கு அவர் பக்கபலமாக; நம்பிக்கைக்கு உரியவராக மாறுகிறார். குஜராத்தின் மறுமலர்ச்சிக்கு உதவுகிறார். ஆனால், உண்மையான ஆச்சரியம், நரேந்திர மோடி 2014-ல் பிரதமராக டெல்லிக்கு வந்த பிறகுதான் நிகழ்கிறது.
விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அனுபவம் இல்லாதவர்களிடம் அதற்கான பணி ஒப்படைக்கப்பட மாட்டாது என ஒரு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மத்திய அரசு மாற்றுகிறது. அதானி வசம் 6 விமான நிலையங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. நாட்டின் மிகவும் லாபகராமான மும்பை விமான நிலையமும் அவருக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், பாதுகாப்புத் துறையில் அதானிக்கு எவ்வித முன் அனுபவமும் இல்லை. ஆனால், 126 போர் விமான உற்பத்திக்கான ஒப்பந்தம் HAL நிறுவனத்தின் மூலம் அதானிக்கு வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்ல. பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றால், அந்த நாட்டிலும் அதானிக்கு தொழில் ஒப்பந்தம் கிடைக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT