Published : 07 Feb 2023 02:02 PM
Last Updated : 07 Feb 2023 02:02 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சிறிது நேர ஒத்திவைப்புக்கு பின்னர், மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மீண்டும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், அதானி குழும பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயன்றனர். அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மக்களவையில் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. பாஜக மக்களவை உறுப்பினர் சி.பி.ஜோஷி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தார். முன்னதாக, துருக்கி - சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சி.பி.ஜோஷி வாசித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மையத்திற்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மதியம் 1.30 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு: மூன்று நாள் முடக்கத்திற்கு பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் அவை நடவடிக்கை தொடங்கியது. அப்போது மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவிற்கு இந்தியா மீட்புப் படை வீரர்கள், மருத்துவர்கள் குழு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை அனுப்பி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் விரைவாக மீட்கப்படுவார்கள் என்று நாம் நம்புவோம். பிரார்த்தனை செய்வோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைத் தொடங்கியது. அப்போது, அதானி குழும பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கியதும், எதிர்கட்சி உறுப்பினர்கள், "பிரதமரே... நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்” என்று கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், காலையில் அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கும்போது, சிறுபான்மையினருக்கான மவுலானா அபுல் கலாம் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்மாநில எதிர்க்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT