Published : 06 Feb 2023 04:41 PM
Last Updated : 06 Feb 2023 04:41 PM
புதுடெல்லி: உக்ரைன் போரால் இந்திய - ரஷ்ய உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையே 1993-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் 30-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்ற இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: ''இந்திய - ரஷ்ய உறவு என்பது எப்போதுமே நட்பு, சமத்துவம், நம்பிக்கை, தன்முனைப்பு ஆகியவற்றைக் கொண்டது.
கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த சில அத்துமீறல் காரணமாக (நேட்டோவில் இணைவதற்கான உக்ரைனின் முயற்சி) இரு தரப்பு உறவு நாம் விரும்பும் அளவுக்கு ஒருங்கிணைப்பு இல்லை. எனினும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, பன்முகத்தன்மை கொண்டதாகவும், இரு தரப்புக்கும் பலன் அளிப்பதாகவுமே இருக்கிறது.
இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு வலுவடைய 1993-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தம் மிக முக்கிய காரணம். அந்த ஒப்பந்தத்தின் மூலம்தான் இருதரப்புக்கான கொள்கைகள் வடிவம் பெற்றன. இந்த ஒப்பந்தம்தான் பல்வேறு மட்டங்களில் இருதரப்பு தொடர்புக்கு; வருடாந்திர மாநாட்டுக்கு வழிவகுக்கிறது. இதேபோல், அரசு குழுக்கள் அமைக்கவும், நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கவும் இந்த ஒப்பந்தம்தான் காரணமாக இருக்கிறது.
இரு தரப்பு வர்த்தக உறவு என்பது மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த 2022-ல் முன் எப்போதும் இல்லாத அளவாக இரு நாடுகளுக்கு இடையே 30 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இரு நாடுகளின் முன்னுரிமை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தலைமையில் வரும் மார்ச் 1 மற்றம் 2 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் இந்தியா வர இருக்கிறார்.
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்கா வெளியிடும் தகவல்கள் சில நேரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சில பிரத்யேக ஆயுதங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு மட்டும் அளிக்க உள்ளதாக அதில் கூறப்பட்டிருக்கும். உண்மையில், இங்கே சிறப்பு எது என்றால் ஆயுதமல்ல; அதற்கான விளம்பரம்தான். அமெரிக்கா நன்றாக விளம்பரம் செய்யும். ரஷ்ய பாதுகாப்பு ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியவை. அதேநேரத்தில் ஆயுத பரிமாற்றத்தையும் அரசியலையும் ரஷ்யா தனித்தனியாகவே பார்க்கும். அமெரிக்காவைப் போல ரஷ்யா இரண்டையும் ஒன்றாக பார்க்காது'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT