Published : 06 Feb 2023 03:35 PM
Last Updated : 06 Feb 2023 03:35 PM

அதானி குழும விவகாரத்தை விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவாகரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மக்களவையில் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர், அதானி குழும விவகாரங்களை முதலில் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுப்பட்டனர். அதற்கு, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ‘அலுவல் திட்டப்படி முதலில் செயல்படுவோம். அதன் பின்னர் மற்ற விவகாரங்களை விவாதிக்கலாம்’ என்று தெரிவித்தார். ஆனாலும், அதானி குழும விவகாரம் குறித்து மட்டுமே முதலில் விவாதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மதியம் மாநிலங்களவைக் கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுப்பட்டனர். பட்டியலிட்டபடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெறாதது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார் சபாநாயகர். தொடர்ந்து நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

அதேபோல், மதியம் மக்களவைக் கூடியதும் அன்றைய அலுவல் பணிகுறித்த ஆவணங்கள் மேஜையில் அடுக்கப்பட்டன. எதிர்கட்சிக் உறுப்பினர்கள் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது நாடாளுமன்றங்கள் விவகாரத் துறை அமைச்சர் பிரதலாத் ஜோஷி, குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தை தொடங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்ததால், அவைக்கு தலைமை தாங்கிய டாக்டர் கிரித் சோலங்கி நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

முன்னதாக, இன்று நாடாளுமன்றம் கூடும் முன்பாக, அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், “இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்படக் கூடாது என்று அரசு விரும்புகிறது. அவர்கள் அதனை எப்படியாவது தவிர்க்க விரும்புகிறார்கள். எங்கள் நோட்டீஸ் மீது நாங்கள் விவாதம் நடத்தக் கோருகிறோம். விரிவான விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறோம். குடியரசுத் தலைவர் உரை மீதும் விவாதம் நடத்தத் தயார் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் அதானி குழும பிரச்சினைக்கு பிரதமர் பதில் அளிப்பதே முன்னுரிமையானது" என்றார். அதற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x