Published : 06 Feb 2023 12:20 PM
Last Updated : 06 Feb 2023 12:20 PM
புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதானி விவகாரம் தொடர்பாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் / பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பாக இன்று (பிப். 6) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், ஜம்மு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் ஜி.பி. சாலையில் உள்ள எல்ஐசி பிராந்திய அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கொடியை கைகளில் ஏந்தியவாறு அவர்கள், கோஷங்களை எழுப்பினர். அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கோ அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கண்காணிப்பின் கீழோ விசாரணை நடத்தப்பட உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல், மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எல்ஐசி, எஸ்பிஐ ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டும் கார்டூன் படத்தை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதை வெளிக்கொண்டு வர விசாரணை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல், ஹைதராபாத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை முன்பாக அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதன் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப. சிதம்பரம், டி. ஆர். பாலு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ''அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதன் மீது விவாதம் நடத்த நாங்கள் தயார். அதேபோல், குடியரசுத் தலைவரின் உரை மீது விவாதம் நடத்தவும் நாங்கள் தயார். ஆனால், அதற்கு முன்பாக அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுவதையோ, விவாதிப்பதையோ அரசு விரும்பவில்லை. இந்த விவகாரத்தை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பதிவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்'' என குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT