Published : 06 Feb 2023 09:39 AM
Last Updated : 06 Feb 2023 09:39 AM
மும்பை: நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு இளைஞர்களின் எதிர்பார்ப்புதான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647வது பிறந்தநாளை ஒட்டி ரவீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: சாதிகளை உண்மையில் இறைவன் உருவாக்கவில்லை. சாமியார்கள் தான் சாதிகளை, பிரிவினைகளை உருவாக்கினார்கள். இறைவனின் பார்வை முன் அனைவரும் சமமானவர்களே. இதை போதித்ததால் தான் ரோஹிதாஸ் புனிதரானார். கபீர், சூர்தாஸ், துளசிதாஸைவிட அதிகம் கொண்டாடப்படுகிறார். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அது சொல்லும் கருத்துகள் ஒன்றுதான். ஆகையால் உங்கள் மதத்தை நீங்கள் கொண்டாடும் அதே வேளையில் பிற மதங்களை அவமதிக்காமல் இருங்கள். புனிதர் ரோஹிதாஸ் நமக்கு 4 மந்திரங்களை அருளியுள்ளார். அவை உண்மை, இரக்கம், ஆன்ம தூய்மை, விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு. இதை நாம் என்றென்றும் பின்பற்றுவோம்.
இந்த உலகில் எந்த தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க முடியாது. இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பாண்மைதான் காரணம். எல்லா வேலையும் சமுதாய நலனுக்காகவே செய்யப்படும்போது அதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது. ஓர் உதாரணம் சொல்கிறேன். பாத்திரம் துலக்கி பிழைப்பு நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பான் ஷாப் ஒன்றை தொடங்கினார். அந்த பான்மசாலா கடை மூலம் ரூ.28 லட்சம் வரை இப்போது சம்பாதித்துள்ளார். ஆனால் இளைஞர்களுக்கு இது கண்ணில் படுவதில்லை. அவர்கள் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு முதலாளியின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். எல்லோரும் வேலை வேலை என்று அலைகின்றனர்.
அரசு வேலைவாய்ப்புகளோ 10 சதவீதம் தான். தனியார் வேலை வாய்ப்பு 20 சதவீதம். எந்த ஒரு உலக நாடும் 30 சதவீதத்திற்கும் மேல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. கைத்திறன் தேவைப்படும் வேலைக்கு இங்கு மதிப்பில்லை. இந்த வேலை உயர்ந்தது, இந்த வேலை தாழ்ந்தது என்ற பாகுபாட்டால் தான் இங்கே வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது. நல்ல வருமானம் ஈட்டியும் கூட விவசாயி என்ற ஒரே காரணத்துக்காக திருமணத்திற்கு பெண் கிடைக்காத விவசாயிகள் உள்ளனர். ஒருசிலர் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்வர். ஒரு சிலர் சமுதாய முன்னேற்றத்திற்காக வேலை செய்வார்கள். எல்லா வேலையும் இறுதியில் சமுதாயத்திற்காகவே செய்யப்படுகிறது.
இந்தியா உலகின் வழிகாட்டியாக விஸ்வகுருவாக உருவாகும் சூழல் கனிந்துள்ளது. நம் நாட்டில் திறன்களுக்கு குறைவில்லை. ஆதலால் நாம் விஸ்வகுருவான பின்னர் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் இருக்கப்போவதில்லை. நம் பாணி வேறு.
நாட்டில் இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்னர் படையெடுத்து வந்தவர்கள் நம் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை, பாரம்பரியத்தை, நம் நம்பிக்கையை சிதைக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் படையெடுப்பின்போது முதலில் அவர்கள் நம்மை பலத்தால் வென்றனர். பின்னர் உளவியல் ரீதியாக வென்றனர். இங்கிருந்த சில சுயநலவாதிகள் முஸ்லிம்கள் படையெடுப்புக்கு வழிவகுத்தனர்.
தீண்டாமையை தீர்க்கதரிசிகள் எதிர்க்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கரும் அதை எதிர்க்கிறார். தீண்டாமையை எதிர்க்கவே அம்பேத்கர் இந்து தர்மத்தை கைவிட்டார். ஆனால் அவர் அதற்குப் பதிலாக தேர்வு செய்த மார்க்கம் கவுதம புத்தரின் பெளத்த மார்க்கம். புத்தரின் சிந்தனையும் பரத சிந்தனை சார்ந்தது தான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT