Published : 06 Feb 2023 07:16 AM
Last Updated : 06 Feb 2023 07:16 AM

எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்டை பிப்.10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

எஸ்எஸ்எல்வி - டி1 ராக்கெட் ஏவுதலுக்கு முன்பு, ஹரிகோட்டா ஏவுதளத்தில் நடந்த பணிகள். (கோப்பு படம்)

சென்னை: இஸ்ரோவின் சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் வரும்10-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடையும் கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எடை குறைந்த செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல, சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கிவிடும்.

அதன்படி, சிறிய ரக 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி - டி1 ராக்கெட் கடந்த ஆக.7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால், ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, எஸ்எஸ்எல்வி வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்எஸ்எல்வி- டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டை இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால், பிப்.10-ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதில் ஏவப்பட உள்ள இஓஎஸ்-7 செயற்கைக் கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது’’என்றனர்.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x