Published : 06 Feb 2023 08:14 AM
Last Updated : 06 Feb 2023 08:14 AM
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ளது. பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி, பிரம்மோற்சவ விழா நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் வரும் 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை வெகு சிறப்பாக நடத்த காளஹஸ்தி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வரும் 13-ம் தேதி காலை காளஹஸ்தி சிவன் கோயில் அருகே உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில், பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்ட உள்ளது. இதனை தொடர்ந்து, மறுநாள் 14-ம் தேதி சிவன் கோயில் முன் உள்ள தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து, தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஞானப்பூங்கோதை தாயார் சமேத காளத்தீஸ்வரரின் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நாட்களாக பிப்ரவரி 14-ம் தேதி கொடியேற்றம், 18-ம் தேதி மகா சிவராத்திரியையொட்டி, நந்தி வாகன சேவை மற்றும் இரவு லிங்கோத்பவ தரிசனம், 19-ம் தேதி காலை தேர்த்திருவிழா மற்றும் அன்றிரவு தெப்போற்சவம், 20-ம் தேதி இரவு சிவ-பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். 22-ம் தேதிசுவாமி கிரிவலம், 23-ம் தேதி கொடியிறக்கம், 24-ம் தேதி பூப்பல் லக்கு சேவை, 25-ம் தேதி ஏகாந்த சேவை நடைபெற உள்ளது.
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, காளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் கோபுரங்கள் எல்லாம் மராமத்து பணிகள் செய்வித்து, வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென தெரிகிறது.
கோயில் முழுவதும் வண்ணக் கோலங்கள் போடப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது. சுவர்ண முகி நதிக்கரையோரம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பதியிலிருந்து பிரம்மோற்சவத்திற்கு வந்து செல்ல கூடுதல் ஆந்திர அரசு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT