Published : 06 Feb 2023 08:23 AM
Last Updated : 06 Feb 2023 08:23 AM
பெங்களூரு: கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி வீரப்பா கடந்த வாரம் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கர்நாடகாவில் நிலுவையில் உள்ள ரூ.1000 கோடிக்கும் அதிகமான அபராதத்தை வசூலிக்க புதிய நடைமுறையை கையாள வேண்டும். குறிப்பாக அபராதத்தில் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு நேற்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக செலுத்த வேண்டிய நிலுவை அபராதத்தை வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் செலுத்தினால் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். இதனை போக்குவரத்து போலீஸாரிடம் மட்டுமின்றி இணையதளம், கூகுள் பே, பேடிஎம் போன்றவை வாயிலாகவும் செலுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ரூ.530 கோடி நிலுவை
அபராதத்தை வசூலிக்க கர்நாடக அரசின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் ரூ.530 கோடி வரை அபராதம் நிலுவையில் இருப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பெங்களூரு போக்குவரத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அபராதத்தை செலுத்தினர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இணையதளம் வாயிலாக பணம் செலுத்த முயன்றதால் இணையதள சேவை முடங்கும் நிலை ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT