Published : 05 Feb 2023 03:52 AM
Last Updated : 05 Feb 2023 03:52 AM
புதுடெல்லி: பெங்களூருவில் நாளை நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில்அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை 2030-ல்அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர், இதை 2025-ல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது இலக்கு காலத்துக்கு 2 ஆண்டுமுன்பாகவே அறிமுகம் செய்யப்படுகிறது. பெங்களூருவில் நாளை நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில் இ20 எனப்படும் 20 சதவீதஎத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக நாடு முழுவதும் 67 பெட்ரோல் நிலையங்களில் இ20 பெட்ரோல் விற்பனை தொடங்கும்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் அடுப்பையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார். இந்த அடுப்பை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த சூரிய மின்சக்தி அடுப்பு நவீன இன்டக்ஷன் அடுப்புக்கு இணையாக இருக்கும். இது உலகத்துக்கு இந்தியாவின் பரிசாக இருக்கும். கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் இதர நிறுவனங்கள் இந்த சூரிய மின்சக்தி அடுப்பு தயாரிப்பில் ஆர்வம் காட்டியுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் மானிய திட்டத்தில் இந்த சூரிய மின்சக்தி அடுப்பை சேர்ப்பது குறித்தும் பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதன் தற்போதைய விலை ரூ.10,000 ஆக உள்ளது. இதன் உற்பத்தி அதிகரிக்கும் போது, இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT