Published : 05 Feb 2023 04:24 AM
Last Updated : 05 Feb 2023 04:24 AM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்குகின்றன.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 130-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் பல்வேறு வியூகங்களை வகுத்திருக்கின்றன.
இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்படுகிறார். இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நியமிக்கப்படுகிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளராக கட்சியில் நிலவிய உட்கட்சி பிரச்சினையை முறையாக கையாண்டார். சத்தீஸ்கர், திரிபுரா, ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானா தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டார்’’என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அந்தகாலக்கட்டத்தில் அண்ணாமலையின் துணிச்சலான நடவடிக்கைகள் இளைஞர் மத்தியில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.
அண்மையில் மங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலையை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். அண்ணாமலையின் வாயிலாக கடலோர மாவட்டங்களின் வாக்குகளைக் கவரவும், இளைஞர்களை ஈர்க்கவும் பாஜக மேலிடம் வியூகம் வகுத்துள்ளது. மேலும் கர்நாடகாவில் வாழும் 60 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் வாக்காளர்களை கவரவும் திட்டமிட்டுள்ளது. அதனால்தான் கர்நாடக தேர்தலில்அண்ணாமலை முன்னிறுத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT