Published : 05 Feb 2023 04:29 AM
Last Updated : 05 Feb 2023 04:29 AM
புதுடெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில், நளினி சிதம்பரம் உட்பட பயனாளிகள் பலரின் ரூ.6 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒடிசா மாநில மக்களிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி சாரதா சிட் பண்ட் என்ற நிறுனம் கடந்த 2013-ம் ஆண்டு வரை 2,459 கோடி வசூல் செய்தது. இவற்றில் முதலீட்டாளர்களுக்கு இதுவரை வட்டியை சேர்க்காமல் ரூ.1,983 கோடியை திருப்பித் தரவில்லை.
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூலம் பயனடைந்தவர்களின் சொத்துக்களை முடக்கி வருகிறது.
சாரதா குழுமத்துக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, நளினி சிதம்பரம் வழக்கறிஞராக செயல்பட்டு அதற்கு கட்டணமாக ரூ.1.26 கோடி பெற்றுள்ளார். இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான தேவேந்திரநாத் பிஸ்வாஸ், அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தத்தா ஆகியோரும் பயனடைந்துள்ளனர். இவர்களின் ரூ.6 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT