Published : 04 Feb 2023 11:49 AM
Last Updated : 04 Feb 2023 11:49 AM

உத்தராகண்டின் ஜோஷிமத் போல ஜம்மு - காஷ்மீர் பகுதியிலும் வீடுகளில் விரிசல்: இந்திய புவியியல் குழு ஆய்வு

பாதிப்புக்குள்ளான வீடுகள்

தோடா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் 22 வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து இந்திய புவியியல் குழு ஆய்வு செய்யவிருப்பதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டது போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலால் இதுவரை 22 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தாத்ரி பகுதியின் துணை ஆட்சியர் ஆதார் ஆமின் சார்கர் நேற்று கூறுகையில், "தோடா மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஒரு வீட்டில் விரிசல் ஏற்பட்டது. நேற்றுவரை ஆறு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன தற்போது விரிசல்களின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) துணை ஆட்சியர் அளித்தப் பேட்டியில், "தோடா பகுதியின் நிலைமை துணை ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் வல்லுநர் குழு ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தங்களது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். பாதிக்கப்பபட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

முன்னதாக, இந்த பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், "நான் தோடா பகுதி இணை ஆணையர் விஸ்வேஷ் மகாஜனுடன் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து வருகிறேன். வீடுகளில் விரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் புவியியல் ஆய்வுக்குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய செய்கிறது. அவர்கள் அங்கு பாதிப்புக்கான அடிப்படை காரணிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். தேவைக்கு ஏற்ப குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஜோஷிமத் நகர விரிசலுக்கு வரைமுறையற்ற கட்டுமானங்கள் மட்டுமின்றி தேசிய அனல் மின் கழகத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தாலும் இந்தப் பகுதி இந்த நிலையை எதிர்கொள்ள காரணம் எனவும் அவர்கள் சொல்லியுள்ளனர். பிரம்மாண்ட நீர் மின் திட்டமும் இதற்கு ஒரு காரணம் என வல்லுநர்கள் கூறியிருந்தனர். நிலத்தின் சில பகுதிகள் புதையுண்டதால், மற்றொரு இமையமலை நகரமான ஜோஷிமத் போல இங்கேயும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x