Published : 04 Feb 2023 03:53 AM
Last Updated : 04 Feb 2023 03:53 AM

22 நாடுகளின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 78% ஆதரவுடன் முதலிடம் - பின்தங்கிய அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்: உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 78% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' நிறுவனம், அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் ‘மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளைவெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜன. 26 முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்புநடத்தி தரவரிசை பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்' வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டும் எதிர்த்து வாக்கினை பதிவு செய்துள்ளனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து 28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 சதவீத வாக்குகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரேசில் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

பின்தங்கிய அமெரிக்க அதிபர்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித் துள்ளனர். தரவரிசை பட்டியலில் அவர் பின்தங்கி 7-வது இடத்தில் உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தஅயர்லாந்து அதிபர் லியோ வரத்கர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சீனா, ரஷ்யாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று ‘மார்னிங் கன்சல்ட்' நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெரும்பாலான தலைவர்களுக்கு அவர்களது நாடுகளில் மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது. எனினும் இந்திய பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்து வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x