Published : 03 Feb 2023 08:08 PM
Last Updated : 03 Feb 2023 08:08 PM
புதுடெல்லி: இ-தாகில் வலைதளத்தில், தமிழகத்திலிருந்து 638 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு 42 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 12 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அளித்த எழுத்துபூர்வமான பதிலில், "நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, நுகர்வோரின் புகார்களை வலைதளம் மூலமாக தாக்கல் செய்யும் வசதிகளை வழங்குகிறது. நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி தேசிய ஆணையம், மாநிலங்கள் ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையம் ஆகியவற்றில் புகார்களை அளிக்கலாம்.
இதற்கென இ-தாகில் (e-Daakhil) என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 34 மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களிலிலிருந்து புகார்களை தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தின் மூலம் இதுவரை 29,553 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு 10,878 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து 35,898 புகார்கள் இதன் மூலம் தாக்கல் செய்யப்பட்டு இதில் 1,810 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 638 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு 42 புகார்கள் பதிவு செய்யப்பட்டு 12 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT