Published : 03 Feb 2023 04:13 AM
Last Updated : 03 Feb 2023 04:13 AM

தொழிற்சாலைகளில் நேரிடும் விபத்துகளில் ஊழியர்கள் அதிகளவில் உயிரிழப்பு - மாநில அரசுகள் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2017-2022 காலகட்டத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் நேரிட்ட விபத்துகளால் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2018-2022 காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 3,331 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதற்கு காரணமானவர்கள் என 14 பேர் மட்டுமே சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

இது பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கப் பெற்ற தரவுகள் என்ற நிலையில், 90 சதவீத ஊழியர்கள் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்கிறது.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர்கள், தங்களது எல்லைக்குட்பட்ட தொழிற்சாலைகளில் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்கள், ஊனமுற்றோர் குறித்த விவரங்கள், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அந்த தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை 6 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கையில், தவறிழைத்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக தொழிற்சாலை ஆய்வாளர் எடுத்த நடவடிக்கையை ஆண்டு வாரியாகவும், தொழிற்சாலை சட்டங்களை கடுமையாக அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட வேண்டும்.

இது தவிர்த்து மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர் பணியிட பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தியது தொடர்பாகவும், தொழிற்சாலை ஊழியர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x