Published : 03 Feb 2023 04:34 AM
Last Updated : 03 Feb 2023 04:34 AM

சென்னை ஐ.சி.எஃப் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் வாரந்தோறும் 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் - ரயில்வே அமைச்சர்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தவிர சோனிபத், லத்தூர், ரேபரேலி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. வரும் நிதியாண்டில் (2023-24) ஒவ்வோரு வாரமும் 2 அல்லது 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து இணையதள செயலி மூலமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட் இதுவாகும். ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை மூலமாக, பயணிகள் என்ன நினைக்கிறார்களோ, அதனை சாத்தியமாக்க முடியும். சுதந்திர பொன்விழா இந்தியா திட்டத்தின்கீழ், 1,275 ரயில் நிலையங்கள்சீரமைக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இது இன்னும் உத்வேகம் அடையும். ‘வந்தே பாரத்’ ரயில் இப்போது சென்னை ஐ.சி.எஃப்-ல் மட்டும் தயாரிக்கப்படுகிறது. ஒரு ரயில் தயாரிப்பதற்கு ஒரு வார காலம் ஆகிறது. வரும் நிதியாண்டு முதல் அரியாணா மாநிலம் சோனிபட், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் ஆகிய 3 இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் இந்த 4 இடங்களிலும் சேர்த்து, ஒரு வாரத்துக்கு 2 அல்லது 3 `வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்படும். நமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கவேண்டும் என்ற பிரதமரின் கனவு இதன்மூலம் சாத்தியமாகும்.

8 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் 52 முறை நமது நாட்டை சுற்றி வரும் அளவுக்கு பயணம் செய்திருக்கின்றன. நாடுமுழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

நாடு முழுவதும் 85 சதவீத வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பசுமை எரிசக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். இந்த ரெயில் ஷிம்லா-கல்கா இடையேயான மலை வழித்தடத்தில் இயக்கப்படும்.

துறைமுகங்களை இணைப்பதற்கு, சிமெண்ட் உள்பட சரக்குகளை கையாள்வதற்கு, மலைப்பகுதிகள் என தனித்தனி வழித்தடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஷீரடி உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு விரைவில் கூடுதல் ரயில் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

முன்பு, நாள்தோறும் 4 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. தற்போது, தினசரி 12 கி.மீ. தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதை அதிகரித்து, வரும் காலங்களில் தினசரி 14 கி.மீ. தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x