Published : 02 Feb 2023 03:20 PM
Last Updated : 02 Feb 2023 03:20 PM

தெலங்கானா முதல்வருக்கு நூதன சவால் விடுத்த ஜெகன் மோகனின் சகோதரி ஒய்எஸ்ஆர் ஷர்மிளா

ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா முதல்வர் கே.எஸ்.சந்திரசேகர ராவுக்கு ஒரு நூதன சவால் விடுத்திருக்கிறார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அந்த சவாலை அறிவித்தார். அதனை ஏற்றுக்கொள்ள ஒரு ஷூவை பரிசாக முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி ஒரு ஷூ பெட்டியைத் திறந்து காட்டினார் ஷர்மிளா.

தொடர்ந்து பேசிய அவர், "தெலங்கானா அமைதியாக இருப்பதாக சந்திரசேகர ராவ் கூறுகிறார். அவர் சொல்வது போல் மாநிலத்தில் பிரச்சினைகளே இல்லையென்றால் அவர் என்னுடன் யாத்திரை வரட்டும். பாத யாத்திரையின் போது எங்குமே எவ்வித பிரச்சினையுமே வரவில்லை என்றால் நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன். ஆனால் அவர் சொல்வது பொய்யாக இருந்து மாநிலத்தில் பிரச்சினைகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தால் அவர் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பதவி விலக வேண்டும்.

அவர் வாக்குறுதி கொடுத்தது போலவே ஒரு தலித்தை முதல்வராக்க வேண்டும். கேசிஆர் எண்ணிலடங்கா வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தார். ஆனால் அவர் அதில் எதையுமே நிறைவேற்றவில்லை" என்றார். தான் விட்ட இடத்தில் இருந்தே கடைசிக்கட்ட பாத யாத்திரை தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஷர்மிளாவின் அரசியல் வியூகம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, கடந்த ஆண்டு அக்டோபரில் ‘ஒய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து அவர் தெலங்கானாவில் ‘பிரஜா பிரஸ்தானம் யாத்திரை‘ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

பாத யாத்திரையின்போது, ஆளும் கட்சியான டிஆர்எஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஷர்மிளா. இதுவரை 3,500 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர் இறுதியில் முதல்வரின் இல்லம் நோக்கி அவர் காரில் செல்ல முயன்றபோது கிரேன் இழுவை வாகனத்தை கொண்டு அவரை காருடன் இழுத்து சென்றனர். இது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் டிசம்பர் மாதம் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக காலவரையின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஷர்மிளா நீதிமன்றத்தை அணுகினார். அவர் பாதயாத்திரையை வாரங்கல்லில் இருந்து தொடங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில் விட்ட இடத்திலிருந்து பாத யாத்திரையை தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். கூடவே, தெலங்கானா முதல்வருக்கும் சவால் விடுத்து மீண்டும் தெலங்கானா அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x