Published : 02 Feb 2023 02:00 PM
Last Updated : 02 Feb 2023 02:00 PM
புதுடெல்லி: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பர்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றம் இன்று(வியாழக்கிழமை) கூடியதும், அதானி குழுமம் மீதான குற்றாச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்திநிலையில் இந்த விவாகரம் குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் விதி எண் 267ன் கீழ் வணிக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவாகாரம் குறித்து விவாதம் நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுடைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எப்போதெல்லாம் முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதிக்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற தேசிய வங்கிகளில் ஏழைகளின் பணமும் உள்ளது. அந்த பணம் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடுகள் இழப்பைச் சந்திக்கும்போது அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்த விவாகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வைாயிலான குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பங்குச் சந்தையில் அறிவித்திருந்த ரூ. 20 ஆயிரம் கோடிக்கான FPO வை திரும்பப் பெறுவதாகவும், பணத்தை முதலீடு செய்திருந்த மக்களுக்கே அதனை திருப்பி வழங்குவதாகவும் கவுதம் அதானி தெரிவித்தார். தற்போதைய சூழலில் FPO-வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த வாரத்திலிருந்து அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் 100 பில்லியன் வரை சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பிற வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் குறித்த விபரங்களை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT