Published : 02 Feb 2023 12:58 PM
Last Updated : 02 Feb 2023 12:58 PM
புதுடெல்லி: அதானி நிறுவன விவகாரம், எல்லையில் சீன அத்துமீறல் உள்ளிட்ட பிச்சினைகளை எழுப்பி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஜாம்பியாவில் இருந்து வந்திருந்த நாடாளுமன்ற குழுவை வரவேற்று கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முன்புறம் வந்து கோஷங்களை எழுப்பினர். அவையில் கூச்சல் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், சபாநாயகர் அவை நடவடிக்கைளை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் ஜன.31ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் அன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நாடாளுன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். பிப்.1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார்.
இன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தனித்தனியாக நடைபெற இருந்தது. கூட்டம் தொடங்கியதும் எதிர்கட்சியினர் அதானி நிறுவன விவகாரம், எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறிய ஊடுருவல், மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப முயன்றன. அதேபோல் புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை விமர்சித்திருந்த எதிர்கட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம், விரிவடையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய சிறிதும் முயற்சிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தன.
இதற்கிடையில், நாடாளுமன்ற விதி 267 ன் கீழ் அதானி குழும பங்குகளின் சரிவுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மாநிலங்களைவை சபாநாயகர் ஜெகன்தீப் தன்கருக்கு நோட்டீஸ் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியின் எம்பி பினாய் விஸ்வம் வேண்டுகோள் விடுத்தார். தனது நோட்டீஸில் இது மிகவும் அவசரமானது என்றும், அதானி குழுமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நாட்டு மக்களின் பணம் அழிந்து போகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்.14ம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் பகுதி மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் சுமார் 36 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT