Published : 14 May 2017 11:32 AM
Last Updated : 14 May 2017 11:32 AM
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை, சரப்ஜித் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேர்த்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். தந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்வதற்கான முயற்சியில் சரப்ஜித் ஈடுபட்டார்.
ஆனால், உடலை எடுத்துச் செல்வதற்கு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸை வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் பயன்படுத்தப் படுவதாகவும், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்துவதில்லை என்றும், இதுதொடர்பாக அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளோம் என்றும், மருத்துவ அதிகாரி கமல்ஜீத் சிங் பாவா தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், தந்தையின் உடலை எடுத்துச் செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸைக் கேட்ட போது, ரூ.400 வாடகை தரவேண்டும் என அதன் ஓட்டுநர், சரப்ஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால், கூலித் தொழிலாளியான அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. இதையடுத்து, தனது உறவினர் கொடுத்த தள்ளுவண்டியில் வைத்து, தந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து சரப்ஜித் எடுத்து வந்துள்ளார். பாதி வழியில் இருந்து ரூ.150 கொடுத்து ஆட்டோவில் உடலை வீட்டுக்கு எடுத்து வந்துள்ள சோகம் நடந்துள்ளது.
இதுபற்றி சரப்ஜித் கூறும்போது, “ தந்தையின் உடலை எடுத்துச் செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.400 கேட்டார். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பின்னர் எனது உறவினரின் தள்ளுவண்டியில் வைத்து தந்தையின் உடலை எடுத்துச் சென்றேன்” என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்திலும் அரசு மருத்துவமனையில் பணம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT