Published : 01 Feb 2023 06:44 PM
Last Updated : 01 Feb 2023 06:44 PM
திருவனந்தபுரம்: ‘விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு காப்பீட்டு நிறுவனங்களை சாரும். வாகனத்தை ஓட்டியவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இழப்பீடு வழங்குவதில் கொள்கை சார்ந்த முடிவுகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கியாக வேண்டும்’ என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு முதலில் இழப்பீடு வழங்க வேண்டும். பின்னர், அதனை அந்த விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி அல்லது அதன் உரிமையாளரிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி சோபி தாமஸ் தெரிவித்துள்ளார்.
“குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் நிபந்தனைகளை மீறும் செயலாக இருந்தாலும், இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பு என்பது காப்பீட்டு நிறுவனத்திற்கு உள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர் போதையினால் வாகனம் ஓட்டுவதற்கான தகுதியை இழந்திருக்கலாம். இருந்தாலும். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து நிறுவனம் தப்ப முடியாது.
ஏனெனில், விபத்து ஏற்படுத்திய வாகனம் காப்பீட்டு நிறுவனத்தில் முறைப்படி செல்லுபடியாகும் வகையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், இழப்பீடு கோரும் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு முதலில் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேநேரத்தில் அந்நிறுவனம் விபத்தில் சிக்கிய அந்த வாகனத்தின் ஓட்டுநர் அல்லது உரிமையாளரிடம் இருந்து அந்த தொகையை திரும்பப் பெற தகுதியுடையது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோட்டார் விபத்து உரிமைக்கோரல் தீர்ப்பாயம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனச் சொல்லி, அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது இதை தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ல் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது மனுதாரர் ஆட்டோவில் சென்றுள்ளார். அவர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மனுதாரர் வாகனத்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதோடு பலத்த காயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஆறு மாதம் காலம் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது.
மனுதாரர் ஓட்டுநராக மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் ஈட்டி வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மோட்டார் விபத்து உரிமைக்கோரல் தீர்ப்பாயத்தை அணுகி 4 லட்ச ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார். ஆனால், அவருக்கு 2.4 லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் அனுமதி கொடுத்துள்ளது. அதனால், உயர் நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக காப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment