Published : 01 Feb 2023 02:00 PM
Last Updated : 01 Feb 2023 02:00 PM

வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்:

பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. வரி விதிப்பு விவரம்:

  • ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி.
  • ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீதம் வரி.
  • ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவீதம் வரி
  • ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் வரி

புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தெரிகிறது. இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-யின் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது. புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual gross salary) மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது சம்பளதாரர்களுக்கு லாபகரமாக இல்லை என்ற கருத்தும் உள்ளது.

புதிய வருமான வரி முறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ரூ.5 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வரம்புதான் தற்போது உயர்த்தபட்டுள்ளது. இனி ரூ.7 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை.

வரி உயர்வு:

  • சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
  • தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
  • தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு.
  • சமையலறை சிம்னி சுங்க வரி 15 சதவீதம் அதிகரிப்பு.
  • ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக அறிவிப்பு.

வரி குறைவு:

  • டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைக்கப்படும்.
  • செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
  • ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
  • இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்படுகிறது.

பிற முக்கிய அம்சங்கள்:

  • 2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.
  • நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும்.
  • லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும்.
  • நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷ்னல் மையங்கள் உருவாக்கப்படும்.
  • அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
  • மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.
  • ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.

  • 2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.
  • உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
  • நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு. பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.

  • கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும்
  • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
  • விவசாய கடன் இலக்குத் தொகை ரூ.20 லட்சம் கோடி
  • பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி

வரும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எந்தெந்த பொருட்களுக்கான விலை உயரும், எவற்றின் விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம்.

விலை உயரும் பொருட்கள்:

  • தங்கம், வெள்ளி நகைகள்
  • கவரிங் நகைகள்
  • சிகரெட்
  • இறக்குமதி செய்யப்பட்ட கார்
  • இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
  • மின்சார சமையலறை புகைபோக்கி
  • இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
  • பொம்மைகள்

விலை குறையும் பொருட்கள்:

  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
  • லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x