Published : 31 Jan 2023 04:27 AM
Last Updated : 31 Jan 2023 04:27 AM

குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரை ஜம்மு-காஷ்மீரின்   நகரில் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழா நிகழ்ச்சியின்போது, தனது சகோதரர் ராகுல் மீது உற்சாகத்துடன் பனிக்கட்டியை தூவி விளையாடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா. படம்: பிடிஐ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் நேற்று நிறைவடைந்தது. நாட்டின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் விதமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை (‘பாரத் ஜோடோ யாத்திரை’) கடந்த 2022 செப்.7-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

மொத்தமாக 137 நாட்களில் 3,800 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்த இந்த பாத யாத்திரை, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நிறைவடைந்தது. யாத்திரை முடிவில், அங்குள்ள ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:

நாடு முழுவதும் 137 நாட்களாக நடைபெற்ற யாத்திரையில் பல்வேறு மாநில மக்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பேசி, குறைகளைக் கேட்டேன்.

நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ, கட்சி வளர்ச்சிக்காகவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற நோக்கிலேயே யாத்திரை மேற்கொண்டேன்.

இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதே எங்கள்நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.

எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தொலைபேசிமூலம் என்னிடம் அந்த தகவலை தெரிவித்தனர். ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த வலி தெரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்தினருக்கு அது புரியும். வன்முறையை தூண்டுபவர்களுக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. வெறுப்பு உணர்வை தூண்டும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது.

அது ராணுவ வீரரோ, சிஆர்பிஎஃப் வீரரோ, எந்த ஒரு காஷ்மீரியோ, யாராக இருந்தாலும் ஒருவரது அன்புக்கு உகந்தவரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கும் வலிமிகுந்த நிகழ்வு இனி நடக்கக் கூடாது என்பதே இந்த யாத்திரையின் நோக்கம்.

ஜம்மு-காஷ்மீரில் என்னைப் போல பாஜக தலைவர்கள் யாரும் நடந்துவர முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் அப்படி செய்யமாட்டார்கள். இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல. அவர்கள் பயப்படுகின்றனர் என்பதே உண்மை.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த யாத்திரையின்போது, 400 இடங்களில் மக்களுடன் ராகுல் கலந்துரையாடி, 12 பொதுக்கூட்டங்களில் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon