Published : 16 Jul 2014 08:51 AM
Last Updated : 16 Jul 2014 08:51 AM
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து மக்களவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதையடுத்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி. மெஹபூபா முப்தி ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸை அளித்தார்.
அதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி பேசும்போது, “பிரேசிலில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ‘பிரிக்ஸ்’ அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். காஸாவில் நடத்தப்படும் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் மட்டுமே உயிரிழந்து வருகின்றனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் பல ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்டு வருகிறது” என்றார்.
அப்போது, ‘‘காஸா’’ பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து மக்களவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாதி, அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹதுல் முஸ்லீமின், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று வலியுறுத்தினர். அவர்களுடன் இணைந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குரல் கொடுத்தார்.
அதற்கு பதில் அளித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “உறுப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளேன்.
நமது வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் வகையில் உள்நாட்டு அரசியலை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற வெளியுறவுக் கொள்கை சார்ந்த அதி உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் வேறு விளைவுகள் எதையும் ஏற்படுத்திவிடக் கூடாது” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். அமைச்சர் குறிப்பிடும் விளைவுகள் என்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசும் போது, “உங்களின் (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிடுமாறு மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.
அவை ஒத்திவைப்பு
அதன் பின்பும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்த தால், அவை நடவடிக்கையை 30 நிமிடங்களுக்கு மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடியபோது, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பேசும்போது, “பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கடந்த காலங்களில் இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதியாக வாழ வேண்டும். இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா எழுப்ப வேண்டும்” என்றார்.
அவையில் அமர்ந்திருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அறிவுறுத்தலின்படி அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT