Published : 30 Jan 2023 07:07 PM
Last Updated : 30 Jan 2023 07:07 PM

தினமும் விழிப்புணர்வு வீடியோக்களை ஒளிபரப்ப தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை தனியார் தொலைக்காட்சிகள் நாள்தோறும் 30 நிமிடம் அளவுக்கு ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் தொலைக்காட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதில், ''பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது தொடர்பாக அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றுக்கான கூட்டமைப்புகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் தொலைக்காட்சிகள் நாள்தோறும் 30 நிமிடங்கள் அளவுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை ஒளிபரப்ப வேண்டும். இந்த வீடியோக்களை மொத்தமாக ஒளிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு சிறு பகுதிகளாக பிரித்தும் ஒளிபரப்பலாம்.

கல்வி மற்றும் இலக்கியம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் தொழில்நுட்பம், பெண்கள் நலம், சமூகத்தில் வலிமை குன்றியவர்களின் நலம், சுற்றுச்சூழல் மற்றும் புராதன கலாச்சார பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சமூக நலன் சார்ந்ததாகவும் வீடியோக்கள் இருக்க வேண்டும்.

இந்த வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டதற்கான அறிக்கையை சேவை ஒளிபரப்பு இணையதளத்தில் மாதம்தோறும் பதிவேற்ற வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x