Published : 30 Jan 2023 02:43 PM
Last Updated : 30 Jan 2023 02:43 PM
ஸ்ரீநகர்: இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றினார்.
கொடியேற்றி முடித்தப் பின்னர், உற்சாகமாக தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து வீசி ஏறியும் விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது தனது முத்திரையான வெள்ளைநிற டி சர்ட் அணிந்திருந்த ராகுல் காந்தி அதன் மீது ஒரு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார்.
முன்னதாக யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையில், பாந்தசவுக்கில் உள்ள முகாம் அலுவலகத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட தேசியகொடியை அவர் ஏற்றிவைத்தார். பின்னர் தன்னுடன் யாத்திரையில் பங்கேற்றவர்ளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி," கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி" என்றார்.
நிறைவு நிகழ்ச்சியைத் தொடர்ந்த ஷெக் இ காஷ்மீர் மைதானத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத முக்கியமான 21 எதிர்க்கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. பேரணியில் திமுக, தேசிய மாநாடு கட்சி, பிடிபி, சிபிஐ, ஆர்எஸ்பி, ஐயுஎம்எல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரை 2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.
இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100 க்கும் அதிகமான தனிஉரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றுளார்.
இந்த நிறைவு நிகழ்வுக்காக, உள்ளூர் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்காக இரண்டாவது நாளாக, லால்சவுக்கில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கின் வரலாற்று சிறப்பு மிக்க மணிக்குண்டில் கொடியேற்றினார்.
பனிபந்து விளையாட்டு: இதற்கிடையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நிகழ்வினைத் தொடர்ந்து, தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து எறிந்து விளையாண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், "ஷீன் முபாரக்! ஸ்ரீநகரில் உள்ள இந்திய ஒற்றுமையை யாத்திரை முகாமின் ஒரு மகிழ்ச்சியான கடைசி காலைப்பொழுது" என்று தெரிவித்துள்ளார். வீடியோவில் உடன்பிறப்புகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பனிப்பந்துகளை எறிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொள்கின்றனர்.
Sheen Mubarak!
A beautiful last morning at the #BharatJodoYatra campsite, in Srinagar. pic.twitter.com/rRKe0iWZJ9— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT