Published : 29 Jan 2023 04:05 AM
Last Updated : 29 Jan 2023 04:05 AM
புதுடெல்லி: இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி உயிரிழந்தார். 2 விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினர். மரங்கள் மீது விழுந்த அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. அங்கிருந்து மிராஜ்-2000 ரக போர் விமானமும், சுகோய்-30 ரக போர் விமானமும் நேற்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டன. மிராஜ் விமானத்தில் ஒரு விமானியும், சுகோய் விமானத்தில் 2 விமானிகளும் இருந்தனர்.
குவாலியர் அருகே முரைனா பகுதியில் 2 போர் விமானங்களும் ஒரே திசையில் அருகருகே பறந்தபோது எதிர்பாராதவிதமாக உரசி மோதின. இதில் மிராஜ் விமானத்தில் தீப்பிடித்தது. சுகோய் விமானத்தில் ஓர் இறக்கை சேதமடைந்தது.
தீப்பிடித்த மிராஜ் விமானம் முரைனா மாவட்டம், பாகர்கார் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை இயக்கிய விமானி ஹனுமந்த் ராவ் சாரதி உடல் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் சுமார் 3 இடங்களில் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி விழுந்தன.
மோதலில் இறக்கை சேதமடைந்த சுகோய் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் குதித்தனர். இருவரும் பாகர்கார் வனப்பகுதியில் உள்ள மரங்களின் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர். சுற்றுவட்டார கிராமத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
விமானிகள் இல்லாத சுகோய் போர்விமானம், அங்கிருந்து 100 கி.மீ. தொலைவு வரை பறந்து சென்று ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம், பிங்கோரா வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
வழிநெடுக மக்கள் நெரிசல் மிகுந்த ஏராளமான நகரங்கள், கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில் விழாமல், வனப்பகுதியில் சுகோய் விமானம் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய விமானப் படை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘குவாலியர் அருகே 2 பயிற்சி விமானங்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்துக்கான காரணம்குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விபத்து குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமானப் படை தளபதி வி.ஆர். சவுத்ரி ஆகியோர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.
பாகர்கார் உட்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 15 கிராம மக்கள், மிராஜ் விமானம் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அவர்கள் கூறியபோது, ‘‘போர் விமானங்கள் வானத்தில் பறந்தபோது பயங்கர சப்தம் கேட்டது. ஒரு போர் விமானம் தீப்பிடித்த நிலையில் தரையை நோக்கி பாய்ந்தது. பாகர்கார் கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் அந்த போர் விமானம் விழுந்து சிதறியது. போர் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து ஒரு விமானியின் உடல் மீட்கப்பட்டது’’ என்றனர்.
முரைனா மாவட்ட ஆட்சியர் அங்கித் அஸ்தானா கூறும்போது, “மிராஜ் விமானத்தின் பாகங்கள் சுமார் 800 மீட்டர் தொலைவுக்கு சிதறி கிடந்தன’’ என்றார்.
சுகோய் விமானம் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டம், பிங்கோரா வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதுகுறித்து பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ராஜன் கூறும்போது, “எஸ்.பி.ஷியாம் சிங் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் போர் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT