Published : 28 Jan 2023 01:06 PM
Last Updated : 28 Jan 2023 01:06 PM
புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரையை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா என்ற பகுதியில் இருந்து சனிக்கிழமை (ஜன.28) காலை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த யாத்திரையின்போது ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி யாத்திரையை பாதியில் நிறுத்தியது.
பாதுகாப்பில் குளறுபடி குற்றச்சாட்டு: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது அவர் காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் யாத்திரையை ராகுல் தொடங்கினார். அவருடன் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கலந்து கொண்டார்.
பனிஹால் பகுதியில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவில் இருந்தது. அங்கு போதுமான போலீஸாரும் இல்லை எனத் தெரிகிறது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு இருப்பதாக கூறி யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.
மீண்டும் தொடக்கம்: இந்த நிலையில், சனிக்கிழமை காலை அவந்திபோரா பகுதியில் இருந்து தனது யாத்திரையை ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். இந்த யாத்திரையில் பிடிபி கட்சியின் தலைவர் முகமது முஃப்தி, அவரது மகள் இல்திஜா முஃப்தி மற்றும் அக்கட்சியிந் தொடண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இன்றைய யாத்திரை நடைபெறும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்திரை தொடங்கும் இடத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளும் சீல்வைக்கப்படிருந்தன. அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களும், பத்திரிகையாளர்களும் மட்டுமே யாத்திரை நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ராகுல் காந்தியை சுற்று மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெற்கு காஷ்மீர் பகுதியின் சோர்சோ (Chursoo)பகுதியில் யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்: இந்தச் சூழ்நிலையில்,ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் யாத்திரையின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளர்.
கார்கே தனது கடிதத்தில், "பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வெள்ளிக்கிழமை யாத்திரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் யாத்திரையிலுல், ஜன.30-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெற இருக்கும் விழாவிலும் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், பிற கட்சியின் முக்கிய தலைவர்கள் ஜன.30 ம் தேதி நடக்க இருக்கும் யாத்திரையின் இறுதிநாள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதனால், இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அடுத்த இரண்டு நாட்களுக்களுக்கான யாத்திரை, ஸ்ரீநகரில் இறுதி நாளான்று நடக்கும் விழாவிற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு விவாகரங்களை கவனிக்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் பாதுகாப்பு ஏற்படுகளை நாங்கள் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் யாத்திரையில் கலந்து கொள்ள வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனால், ஒரு நாளில் எவ்வளவு பேர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என்று சொல்வது யாத்திரை ஏற்பாட்டாளர்களால் சரியாக சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக பயணித்து காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-ம் தேதி நிறைவடைகிறது. 3500 கிமீ தூரம் நடந்துள்ள இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை கட்சி யாத்திரை இல்லை என்றும் நாட்டில் வளர்ந்து வரும் வெறுப்புக்கு எதிராக அன்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT