Published : 28 Jan 2023 11:15 AM
Last Updated : 28 Jan 2023 11:15 AM
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் "ஏரோ இந்தியா 2023" கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, யலஹங்கா விமானநிலையத்திலிருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு இறைச்சி, அசைவ உணவு விற்பனை செய்ய தடைவிதித்து, ப்ரூஹட் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானநிலையத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 14 வது "ஏரோ இந்தியா 2023" கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி கடைகளை மூடவேண்டும் என்று பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிபிஎம்பி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் ஜன. 30 முதல் பிப். 20 வரை யலஹங்கா விமானநிலையதையெட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும் அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுதிறது என்று பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த உத்தரவினை மீறுவர்கள் மீது பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய வினமானச்சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைகுறித்து பிபிஎம்பி அதிகாரிகள் கூறுகையில், "பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ண இயற்கையின் தூய்மை பணியாளர்களான கழுகு போன்ற பறவைகள் வருகின்றன. இதனால் வானில் வட்டமிட்டுபறக்கும் அதுபோன்ற பறவைகள் விமானங்களில் மோதி பாதிப்புகளை ஏற்றபடுத்த கூடும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது" என்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பாதுகாப்புத்துறை கடந்தாண்டு இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற ஏரோ இந்தியா குறித்து அறிவித்தது. ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியாக இந்த ஏரோ இந்தியா கருதப்படுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வியாபாரிகளுக்காக நடக்கிறது. கடைசி இரண்டு நாளில் பொதுமக்கள் விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த கண்காட்சி குறித்து கர்நாடகா முதல்வர் பசராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை கூறுகையில், இந்தாண்டு நடைபெற இருக்கிற 14 வது ஏரோ இந்தியா கண்காட்சி, அதிக பங்கேற்பாளர்களுடன் மிகப்பெரிய கண்காட்சியாக நடைபெறும். இதில், பாதுகாப்புத்துறை தலைவர்கள்,விமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும்,இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 633, வெளிநாட்டைச் சேர்ந்த 98 என மொத்தம் 731 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
கடந்த 1996ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஏரோ இந்தியா கண்காட்சி உலக அளவில் நடைபெறும் முதன்மையான விமான கண்காட்சிகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. இதுவரை வெற்றிகரமாக 13 கண்காட்சிகள் நடந்தப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த கண்காட்சி 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT