Published : 28 Jan 2023 08:03 AM
Last Updated : 28 Jan 2023 08:03 AM
புதுடெல்லி: பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால் அதை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இமயமலையின் மேற்கு பகுதியில் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் பாயும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வது, தண்ணீர் அளவு
சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே, உலக வங்கியின் மேற்பார்வையில் கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 9 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி மேற்கு பகுதி ஆறுகளில் ஓடும் நீரில் இருந்து இந்தியா மின்சாரம் உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இந்த நதிகளின் பாயும் தண்ணீரில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதிகாரிகள் சந்திப்பு: கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர் மின் சக்தி திட்டங்களை இந்தியா செயல்படுத்தியபோது, அதற்கு பாகிஸ்தான் தொழில்நுட்ப ரீதியாக சில எதிர்ப்புகளை தெரி வித்தது. இதை ஆய்வு செய்ய நடுநிலையான நிபுணரை நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் கடந்த 2015-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தது. அடுத்த ஆண்டில், இந்த வேண்டுகோளை திரும்ப பெற்ற பாகிஸ்தான், நடுவர் தீர்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டது. இதற்கு ஒப்புக் கொண்ட உலக வங்கி இருதரப்பும் சுமூகமாக இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும்படி கூறியது. அதன்படி சிந்து நிதி நீர் ஆணைய கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் சந்தித்து பேசினர்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியா எப்போதும் ஆதரவாக இருந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் செயல்பாடுகள், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் சிலவற்றை மீறுவதாக உள்ளது. அதனால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடந்த 25-ம் தேதி சிந்து நதி நீர் ஆணையர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. சிந்து நதி நீர் ஒப்பந்த விதிமுறை மீறல்களை பாகிஸ்தான், பேச்சுவார்த்தை மூலம் 90 நாட்களுக்குள் சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பே இந்த நோட்டீஸின் நோக்கம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 63 ஆண்டுகளில் கற்ற பாடங்களுக்கு ஏற்ப சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT