Published : 28 Jan 2023 05:47 AM
Last Updated : 28 Jan 2023 05:47 AM

கூலி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் - பிரதமருக்கு கோரிக்கை விடுத்த தோட்டக்காரர்

புதுடெல்லி: என்னுடைய கூலியைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தோட்ட வேலை செய்யும் தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிலருக்கு சிறப்பு அனுமதி டிக்கெட்கள் தரப்பட்டிருந்தன. அவ்வாறு சிறப்பு அனுமதியைப் பெற்றவர்களில் மத்தியபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த சுக் நந்தன் என்பவரும் ஒருவர். இதுகுறித்து சுக் நந்தன் கூறியதாவது:

குடியரசு தின விழாவைப் பார்க்க நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். இந்த விழாவைப் பார்க்க சிறப்பு அனுமதி கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை.

பிரதமர் மோடியை அருகில் இருந்து பார்த்தேன். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தால்,நான் கடைசியாக வேலை பார்த்தஎன்னுடைய காண்டிராக்டரிட மிருந்து 44 நாட்கள் வேலை செய்த கூலிப் பணத்தை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை வைப்பேன். என்னுடைய கூலியைப் பெற்றுத் தர பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நான் வேலை செய்ததற்கான ரசீது, வருகைப் பதிவேட்டு ரசீதுகள் என்னிடம் உள்ளன. ஆனால் கூலியைத் தர காண்டிராக்டர் மறுத்துவருகிறார். நான், என்னுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் இந்தியா கேட் அருகிலுள்ள கூடாரத்தில் வசித்து வருகிறேன்.

நகரசபை நிர்வாக விதிகளின்படி எனக்கு 44 நாட்களுக்கு கூலியாக ரூ.21 ஆயிரம் தரவேண்டும். ஆனால் எனக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே கூலி தருவதாக அந்த காண்டிராக்டர் கூறினார்.இதனால் நான் வேலை செய்துகொண்டிருந்தபோது அவருக்குச் சொந்தமான பிரஷ் கட்டிங் கருவியை எடுத்து வந்துவிட்டேன். எனக்குப் பணம் தரும்போது அவரது கருவியைத் தருவேன். ஆனால் கருவியைத் தராவிட்டால் போலீஸில் புகார் செய்வதாக மிரட்டுகிறார். இந்த விஷயத்தில் அரசு எனக்கு உதவவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து காண்டிராக்டர் ஜிதேன் உபாத்யாய் கூறும்போது, “சுக் நந்தனுடன் ஊதிய விஷயத்தில் தகராறு இருப்பது உண்மைதான். ஆனால் ரூ.21 ஆயிரம் கூலி பாக்கி இருக்காது என நினைக்கிறேன். பிரஷ் கட்டிங் கருவி மட்டுமல்லாமல் சில பிளம்பிங் கருவிகளையும் அவர்எடுத்து வைத்துள்ளார். அதை அவர் முதலில் திரும்பித் தரவேண்டும். பின்னர் கூலிப் பிரச்சினையைப் பற்றி பேசட்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x