Published : 27 Jan 2023 08:05 PM
Last Updated : 27 Jan 2023 08:05 PM

ஜம்மு காஷ்மீரில் பாதியில் நிறுத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரை: பாதுகாப்பில் குறைபாடு என காங். குற்றச்சாட்டு

யாத்திரையில் ராகுல் காந்தி

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வரை சென்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த குறைபாடுதான் காரணம் என காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான ஜம்முவை கடந்து வருகிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு யாத்திரை வெள்ளிக்கிழமை காலையில் பானிஹால் என்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கியது. இன்றைய யாத்திரையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.

வெள்ளிக்கிழமை காலை யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தி, ஜம்முவில் நிலவும் கடும் குளிரிலும் இந்த யாத்திரையில் அவர் எப்போதும் அணியும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்தபடி பங்கேற்றார். அவருக்கு உள்ளூரை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் மேளதாளம் முழங்க நடனமாடிய படி வரவேற்பு கொடுத்திருந்தனர்.

யாத்திரையில் 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யாத்திரை தொடங்கி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை வழியே தெற்கு காஷ்மீர் பகுதியை அவர் நடைவழியாக கடக்க இருந்தார். இந்தப் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவரிடம் அதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரிகள் தெரிவிக்கவே, யாத்திரை நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா உட்பட பலரும் இந்த யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். இதனை ஆளுநரும் உறுதி செய்திருந்தார்.

ராகுல் காந்தி கருத்து: "துரதிர்ஷ்டவசமாக போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் குலைந்ததால் நான் எனது நடைபயணத்தை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்றபட்டது. நாங்கள் சுரங்கப்பாதையை விட்டு வெளியேறியதும் போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் குலைந்தது. இதனால் எனது பாதுகாப்பு சங்கடத்திற்குள்ளானது. அதனால் நாங்கள் யாத்திரையை நிறுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். ஏனென்றால், நான் என் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி போக முடியாது. கூட்டத்தினரை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. மீதி யாத்திரை நடக்க இருக்கும் நாட்களில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

"இதற்கு நானே சாட்சி. ஜம்மு காஷ்மீர் போலீஸாரால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வெளிப்புற வளையம், ராகுல் காந்தி நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் காணமால் போய்விட்டது. நாங்கள் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்குள் நுழைந்து 11 கிலோ மீட்டர் நடப்போம் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாதியில் நிறுத்த வேண்டி இருந்தது" என ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு? - யாத்திரையின் போது திடீரென பாதுப்பு அதிகாரிகள் விளக்கிக் கொள்ளப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் கூட்டத்தை நிர்வகிக்க தவறி விட்டது. ராகுல் காந்தி 30 நிமிடங்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் அவர் குண்டு துளைக்காத வாகனத்தின் மூலம் அழைத்து வரப்பட்டார் என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால் கூறுகையில், "நாங்கள் பானிஹால் சுரங்கத்தை தண்டியதும் போலீசார் கலைந்து சென்றனர். யார் அதற்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு உரிய பதிலை அளித்து, எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

காவல் துறை மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மூத்த காவல் துறை அதிகாரி விஜயகுமார், "பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. யாத்திரை அமைப்பாளர்கள் பெரிய கூட்டம் ஒன்று வந்து இணைந்துக் கொள்வது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. யாத்திரையை நிறுத்துவதற்கு முன்பாக அதுபற்றி எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை" என்றார்.

இதற்கிடையில், யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல, பாராமுல்லா பானிஹால் இடையேயான ரயில் போக்குவரத்து காலையில் நிறுத்தப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்திருந்தனர். முன்னதாக, புதன்கிழமை நிலச்சரிவு, மோசமான வானிலை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x