Published : 14 Dec 2016 09:24 AM
Last Updated : 14 Dec 2016 09:24 AM
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கல் உட்பட 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 18-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் தில்ஷுக் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி இரவு 7 மணியளவில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடித்தன. இதில் 19 பேர் பலியாயினர், 130 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் (ஐஎம்) தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பே குண்டுவெடிப்புக்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்த 6 மாதங்களுக்குப் பிறகு பிஹாரில் (நேபாள எல்லையில்) இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தீவிரவாதிகளான யாசின் பத்கல் மற்றும் அசதுல்லா அக்தர் ஆகிய 2 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்து விசாரித்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், தஹ்சின் அக்தர், ரஹ்மான், அசாஸ் ஷேக் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஹைதராபாத்தில் உள்ள செர்லாபல்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாது காப்பு கருதி சிறைச்சாலை வளாகத்திலேயே, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ரியாஸ் பத்கல் என்கிற ஷா ரியாஸ் அகமது முகமது இஸ்மாயில் ஷா பந்தாரி தலைமறைவாகி உள்ளான். இவனை பிடிக்க என்ஐஏ தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 158 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 201 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 502 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பு வழங்கினர்.
இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 18-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் அனைவருக்கும் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT