Published : 27 Jan 2023 02:35 PM
Last Updated : 27 Jan 2023 02:35 PM
பானிஹால்: “தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், நாட்டில் நிலவி வரும் சூழலை மாற்றும் அக்கறையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றேன்” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, அதன் இறுதி பகுதியான ஜம்மு காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. சிறிய இடைவேளைக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் பானிஹால் பகுதியில் இருந்து யாத்திரை வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கலந்துகொண்டு, ராகுல் காந்தியுடன் நடந்தார். யாத்திரையில் இருவரும் டி-ஷர்ட் அணிந்திருந்தனர்.
யாத்திரையில் கலந்துகொண்டது குறித்து ஒமர் அப்துல்லா கூறியது: “நாட்டில் தற்போது நிலவும் சூழலினை மாற்றவேண்டும் என்ற அக்கறையில் யாத்திரையில் பங்கேற்றேன். இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தியின் மதிப்பையும் பிம்பத்தையும் உயர்த்துவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டின் தற்போது நிலவும் சூழலை மாற்றுவதற்காக நடத்தப்படுகிறது.
எங்களின் தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல் நாட்டின் நலனுக்காகவே நாங்கள் இருவரும் இதில் ஒன்றிணைந்துள்ளோம். தற்போதுள்ள அரசு, அரபு நாடுகளுடன் நட்புறவுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால், அந்த அரசில் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தின் பிரதிநிதிகள் ஒருவர்கூட இல்லை.
நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து, நாட்டை ஆண்ட - ஆளும் கட்சிகளில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து அவர்களின் அணுமுறையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்கும் காங்கிரஸ் நிலைப்பாடு பற்றி இப்போது ஆராய விரும்பவில்லை. சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வர நீதிமன்றத்தில் நாங்கள் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த வழக்கின் விசாரணையை அரசு இழுத்து அடிக்கிறது. இது வழக்கின் வலிமையை உணர்த்துகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடந்தது. இரண்டு தேர்தலுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருப்பது இதுவே முதல்முறை. அங்கு போர்ப் பதற்றம் உச்சத்தில் இருக்கும்போதும் இவ்வாறு நடந்தது இல்லை. இந்த அரசு மக்கள் தேர்தலுக்காக கெஞ்ச வேண்டும் என்று விரும்புகிறது. நாங்கள் யாசகர்கள் இல்லை. நாங்கள் கெஞ்சப் போவது இல்லை" என்றார் ஒமர் அப்துல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT